அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு கலிபோர்னியாவின் ரெட்டிங் என்ற பகுதியில் சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ வீடுகளுக்கும் பரவியதனால் பல வீடுகள் தீயினால் பாதிப்புக்குள்ளாகின.
வேகமுடன் வீசிய காற்றால் காட்டுத்தீ பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சூறாவளி தீ ஏற்பட்டதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளை விட்டு வெளியேற வேறிடங்களுக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் மீட்புக்குழுவினரும் இணைந்து மீட்புபணிகளில் ஈடுபட்ட நிலையில் 2 தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் சுமார் 44 ஆயிரத்து 450 ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிவதால், அதனை கட்டுப்படுத்ததுவதில் தீயணைப்பு வீரர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.