குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை மா அதிபரின் செயற்பாடு பிழையானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நடந்துகொண்ட விதம் ஏற்புடையதல்ல எனவும் இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபரிடம் விளக்கம் கோரப்படும் எனவும் ஜனாதிபதி பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த காவல்துறை மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தொலைபேசி அழைப்பின் ஊடான உரையாடல் ஒலி வாங்கி ஊடாக அனைவருக்கும் கேட்டுள்ளதாகவும் இது குறித்த தகவல் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
தமது உத்தரவின்றி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் குறித்த நபர் ஒருவரை கைது செய்ய இடமளிக்கப்படமாட்டாது என தொலைபேசியின் மறுமுனையில் பேசிய நபரை , காவல்துறை மா அதிபர் சார் என விளித்து கூறியிருந்தார்.
இந்த சம்பவம் ஊடகங்களில் பிரசூரிக்கப்பட்டு விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 comment
நிகழ்வு ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த காவல்துறை மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர, தொலைபேசி அழைப்பு ஒன்றுக்கான பணிப்புரையை வழங்கியபோது, அதை ஒலி வாங்கி ஊடாக குறித்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் கேட்டுள்ளாராம்! பொது மேடையொன்றில், ஒலிவாங்கியூடாக முறைகேடான தனதுபணிப்புரையை வழங்கிய முதல் போலீஸ் மா அதிபர் இவராகத்தான் இருப்பார்?
சனீஸ்வரன் காலம் நேரம் பாராது அவரின் நாவில் அப்பொழுதுதான் குந்தினாரோ? ‘FCID கூட சுதந்திரமாக இயங்கவில்லை’, என்பதை இவ்வுரையினூடாக மக்கள் அறிந்து கொண்டனரோ? தவறுக்குப் பொறுப்பேற்று இன்று வரை பதவி விலகாதிருப்பது, காவல்துறை மா அதிபரின் நாணயத்தைப் பறைசாற்றுகின்றது! நல்லாட்சி அரசுத் தலைவரான, ஜனாதிபதியாவது இவரைப் பதவி விலக்குவாரா?
நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தவர் தன்னிலை மறந்து அவ்வழைப்புக்கு பதில் அளித்திருக்கின்றாரென்றால், அந்த அழைப்பை அவர் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்த்துக் காத்திருந்தமை உறுதியாகின்றது? காவல்துறை மா அதிபரே இப்படி ஒரு தவறைச் செய்யும்போது, என்னதான் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அரச பணியாளரான ஒரு பெண்ணை யாழ் போலீசார் நடு நிசியில் முறைகேடாகக் கைது செய்வது, எப்படித் தவறாகும்?
பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தும், இன்று வரை அவரைக் கைது செய்யம் துணிவில்லாத போலீசார், சாதாரண பொது மக்களிடம் தமது கடமையுணர்வை நிரூபிக்க முயல்வது, வெட்கக் கேடானது! (நீதிமன்றுகள் மட்டும் நியாயமாகவா இயங்குகின்றன? ஞானசார தேரருக்குப் பிடிவிறாந்து வழங்கிய நீதிமன்றம், தொடர்ந்து வந்த தவணைக்கு அவர் சமூகமளிக்காதபோது, போலிஸாரைக் கண்டிக்காமல் மீண்டும் பிடிவிறாந்து வழங்கியிருக்கின்றது? நல்லாட்சித் தத்துவம் நன்றாகவே இருக்கின்றது!)