குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடல் இராமேஸ்வரத்தில் உள்வாங்கியதால் மீன்பிடி தொழில் பாதிப்படைந்துள்ளதோடு, கடல் பூச்சிகள் கரைக்கு வருவதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கரையோர மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் சிரமமுற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(29) அதிகாலை முதல் ஓலைக்குடா, சங்குமால் தெற்குவாடி ,வடகாடு உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் கடல் சுமார் 600 மீட்டர் தூரம் வரை உள் வாங்கியுள்ளது. இதனால் கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுபடகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்துள்ளது. கடலில் கரையோரங்கள், மீனவர்கள் கரை வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர் .
ஆனால் திடீரென கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் மீகுந்த அவதியுற்றனர். மேலும் கடல் உள்வாங்கியதால் கடலில் உள்ள விஷ பூச்சிகளான ஜெல்லி,நட்சத்திர மீன்,கடல் கம்பளிபூச்சி ஆகிய பூச்சிகள் கடல் நீர் உள் வாங்கியதால் கரைக்கு வர தொடங்கி விட்டது.
அப்படி வரும் கடல் பூச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் பிடித்து விளையாடி வருகின்றனர்.இதனை தடுக்க அப்பகுதி மீனவ மக்கள் வரும் சுற்றுலா பயணிகளை கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.