Home இலங்கை ஜனாதிபதியின் மேற்பார்வையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துரித அபிவிருத்தி….

ஜனாதிபதியின் மேற்பார்வையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் துரித அபிவிருத்தி….

by admin


வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி தலைமையில் இன்று ஒன்று கூடியது… நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைவுக்கு உள்ளாகியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் முதற் தடவையாக ஒன்றுகூடியது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

26 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

2018 ஜூன் 05ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதி இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுகின்றார்.

இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரும் மேலும் 15 அமைச்சரவை அமைச்சர்களும் இரு மாகாணங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் முப்படை தளபதிகளும் செயற்படுகின்றனர்.

இந்த ஜனாதிபதி செயலணியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடப்படும். முன்னுரிமைய அளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து குறித்த துறைகளையும் குழுக்களையும் இலக்காகக் கொண்டு புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மேல் மாகாணத்தினால் 40 சதவீத பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தினால் 4 சதவீதமும் கிழக்கு மாகாணத்தினால் 6 சதவீதமும் அளவிலான குறைந்த பங்களிப்பே வழங்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரு மாகாணங்களிலும் 1847 கிலோமீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன்,  யாழ்ப்பாணம், மயிலிட்டி, மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன் இரு மாகாணங்களிலும் கிராமிய பாதைகள், குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், விவசாயம், பொருளாதார நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளிலும் விரிவான அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக விரிவான வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துவதுடன், அம்பாறை சீனி தொழிற்சாலை, மட்டக்களப்பு கடதாசி தொழிற்சாலை மற்றும் நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் தாபித்தல் உள்ளிட்ட கைத்தொழில் துறை மறுமலர்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களினூடாக இவ்விரு மாகாணங்களின் மக்களின் வாழ்க்கையிலும் துரித மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்ன, சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும்  இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2018.07.30

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva July 30, 2018 - 6:35 pm

//வடக்கு- கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் கடந்த மூன்றரை வருட காலத்தில் அரசாங்கத்தினால் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்பில் மக்களுக்குப் போதிய புரிந்துணர்வு கிடைக்கப் பெறவில்லை//, என ஆதங்கப்படும் ஜனாதிபதிக்கு, அம் மக்களின் உண்மையான தேவைகள் என்னவென்று புரியவில்லையா அல்லது நாடகமாடுகின்றாரா? வீட்டு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அத்தியாவசியமானவை, என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதைத்தானே முன்னாள் ஜனாதிபதி திரு. மகிந்த ராஜபக்ஷவும் முன்னெடுத்திருந்தார். அப்போதெல்லாம், தேர்தல் பிரச்சாரங்களின் போது அது குறித்த விமர்சனங்களை இவர்களும் முன்வைக்கத் தவறவில்லையே?

பௌதீக அபிவிருத்திகள் தேவைப்படும் அளவுக்கு நமது மக்களுக்குத் தமது உரிமைகள் மற்றும் உடமைகளும் அத்தியாவசியமானவை, என்பதை உணரும் பக்குவம் ஜனாதிபதிக்கு இல்லாது போனதேன்? மக்களின் அத்தியாவசிய தேவையான அவர்களின் காணிகளை விடுவிக்காது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த நம்பகமான உண்மைத் தரவுகளைக் கூறாது, சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தை ஈடுபடுத்தாது விடுகின்ற வரையில் பௌதீக அபிவிருத்திகளைக் காட்டி மக்கள் மனங்களை இவர்கள் எவராலும் வெல்ல முடியாது.

அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள, மத்திய, மாகாண, உள்ளூராட்சி சபைக் கட்டமைப்புக்கள் இருக்கும்போது, அவற்றினூடாக மக்களின் உண்மையான தேவைகளை தேடியறிந்து நிறைவேற்றுவதை விடுத்துப் புதிதாக முப்படைத் தளபதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணிக் குழுவென்று ஒன்று அவசியம்தானா?

ஆட்சியாளர்களுக்கு மனித வளங்களின் பெறுமதி தெரிந்து அவற்றை உண்மையாகவே பயன்படுத்தத் தெரிந்திருக்குமானால், ஒரு இலட்சம் வரையான இராணுவத்தினரை வடக்கில் தண்டத்துக்குக் குவித்து வைத்திருக்க மாட்டார்கள்?

சிறுபான்மையினருக்கேயுரிய நியாயமான உரிமைகள் பகிரப்பட்டால், அவர்களுக்கு அரசுக்கெதிரான போராடும் தேவை ஒன்று என்றைக்கும் எழப் போவதில்லை, என்ற ஒரு சிறிய உண்மையை இவர்கள் உணராத வரை, உண்மையான அபிவிருத்தி என்பது கானல் நீரே!

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More