நாடாளுமன்ற மக்களவையில் திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ எனக் குறிப்பிட்டமைக்காக இந்திய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி மன்னிப்பு கோரியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மேனகா காநதி திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு குறிப்பிட்டமைக்காக மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் மேனகா காந்தியும் அதனைக் கேட்டு சிரித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் எனக் குறிப்பிடப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.