குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக சக உறுப்பினர் அஸ்மின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விவகாரம் மாநகர சபையின் அமர்விலும் எதிரொலித்தது.
இதன் போது அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளும் கண்டனம் வெளியிட்டுள்ள அதே வேளையில் ஈபிடிபியினர் வெளிநடப்பும் செய்திருந்தனர்.
யாழ் மாநகர சபை அமர்வு மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன் போது ஈபிடிபியின் உறுப்பினர் ரெமீடியஸ், அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பது குறித்தான உறுப்பினர் அஸ்மினின் குற்றச்சாட்டு தொடர்பில் சபையில் பிரஸ்தாபித்தார்.
அத்தோடு அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டிய நேரத்தில் இருக்கின்ற பெண் அரசியல் வாதிகளையும் அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகின்றது.
அவரிடம் கைத்துப்பாக்கி இருக்கா இல்லையா என்பதற்கப்பால் பெண் அரசியல்வாதிகளை அச்சுறுத்தி அவமானப்படுத்தும் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய செயற்பாடுகளை நாங்கள் கண்டிக்கிறோம் என்றார்.
இதனையடுத்து அனந்தி சசிதரன் மீதான குற்றச்சாட்டுக்கள் அவரை அச்சுறுத்துவதாக அல்லது அவமானப்படுத்துவதாக அமைவதுடன் அவருக்கு எதிரான திட்டமிட்ட சதி நடவடிக்கைகளையும் நாம் வண்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான வி.மணிவண்ணண் தெரிவித்தார்.
ஆகவே அனந்திக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை அனைவரும் கண்டிப்பதுடன் சபையையும் ஒத்தி வைக்க வேண்டுமெனக் கோரப்பட்டிருந்த போதிலும் அவ்வாறு சபையை ஒத்தி வைக்க முடியாதென முதல்வர் இமானுவேல் ஆர்னோலட் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சபையிலிருந்து ஈபிடிபியின் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதனையடுத்து சுமார் 15 நிமிடங்களின் பின்னர் மீளவும் சபைக்கு வந்து சபை அமர்விலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.