அசாமில் குடியிருப்போர் விவகாரம் தொடர்பாக வரைவு பதிவேடு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அசாம் மாநிலத்தில் வசிப்போர் பற்றிய தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் அசாமை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும் இவர்கள் பங்களாதேசில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் வந்து குடியேறியவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அசாம் குடிமக்கள் பதிவேட்டின் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜெலா இறுதி வரைவு பதிவேட்டின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கையை உச்சநீதிமன்றில் தாக்கல் செய்த நிலையில் அது தொடர்பில் நேற்று விசாரணை இடம்பெற்றது.
இதன்போது வரைவு இறுதி பதிவேடு தொடர்பாக மத்திய அரசு நிலையான இயக்க நடைமுறையை உருவாக்கி அதை நீதிமன்றின் ஒப்புதலுக்காக வருகிற 16ம் திகதி தாக்கல் செய்ய வேண்டும்.மேலும், விடுபட்டு உள்ளவர்களின் பெயர்களை சேர்க்க மற்றும் இது தொடர்பான ஆட்சேபங்களை தெரிவிக்க உள்ளூர் பதிவாளர் ஒருவர் மூலம் விளக்கமறிக்கப்பட வேண்டும்.
இந்த பதிவேடு தொடர்பாக கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது. ஏனென்றால் இது வெறும் ஒரு வரைவு பதிவேடுதான் என நீபதிகள் உத்தரவிட்டனர்.