யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ். காவல் நிலைய உதவிக் காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய காவல்துறை பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக, சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட காவல்துறை அணியொன்று யாழில் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நூறுக்கும் மேற்பட்ட சிவில் காவல்துறை அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் குறித்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காவல்துறையினரின் செயற்பாடுகளுக்கு பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ள அவர் வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் விரைவில் அவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நேற்று முன்தினம் கிராம அலுவலர் அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்ததாகவும் , எனினும் குறித்த கிராம சேவையாளர் அலுவலகம் இயங்கும் வீட்டில் முன்னர் வாள்வெட்டுக்குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் வசித்து வந்ததாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தவே வந்த குழுவினர் கிராம சேவையாளரின் அலுவலகத்தை சேதப்படுத்தியதுடன், அவரையும் அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால், விரைவில் தாக்குதலாலளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் எனவும் யாழ். காவல் நிலைய உதவிக் காவல்துறை அத்தியட்சகர மேலும் தெரிவித்தார்.