தொடர் மழை காரணமாக இடுக்கி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் ஆற்றின் கரையோரத்தில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக இடுக்கி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் 26 ஆண்டுகளுக்கு பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் கொண்ட அந்த இடுக்கி அணையில், நேற்றைய நிலவரப்படி 2,395.96 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. இடுக்கி அணையில் மதகுகள் இல்லாததால் துணை அணையான செருதோணி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்ததால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல பெரியாற்றை தூர்வாரும் பணி நடந்து வருவதுடன் மேலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களிடம் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் வீடு, வீடாக சென்று அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.