சந்திரிக்கா அம்மையாருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜயதுங்க சிங்கள மக்கள் மரமென்றால் சிறுபான்மையோர் அதைச் சுற்றி வளரும் கொடி போன்றவர்களாக வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்த அந்தக் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை. தமிழர்களையும் சிறு மரங்களாக அவர்கள் விரும்பும விதத்தில் வாழ வழி வகுத்துத் தாருங்கள் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் யாழில் இன்று (02.8.18) ஆராயப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது கருத்து தெரிவித்த வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், “இன்று சந்திரிக்கா அம்மையார் இந்த நிகழ்வில் இங்கு பங்குபற்றி எம்மை ஊக்குவிக்கின்றார் என்றால் அவரின் கருத்துக்களும் மேலிருந்து எமக்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆணை இடுவதை விட்டு கீழிருந்து நாம் செய்வதை உன்னிப்பாக கவனித்து எம்மை உயர்வடைய வைக்க அவர் ஆயத்தமாக இருக்கின்றார் என்று அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அஅலுவலகத்தின் தலைவியும் முன்னாள் ஐனாதிபதியுமான சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலையில் இக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது இந்த அலுவலகம் அமைக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களில் முன்னெடுத்த செயற்திட்டங்கள் தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.
அதேவேளை இந்த அலுவலகத்தினூடாக யாழ் மாவட்டம் உட்பட வடக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டு பலரதும் கருத்துக்களும் பெறப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேற்படி அலுவலகத்தின் அதிகாரிகள் அரசியல் வாதிகள் மற்றும் அரச வங்கிகள், அரச அலுவலகங்களின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்நு கொண்டிருந்தனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.