குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையை சேர்ந்த சமூக ஆர்வலர்களில் ஒரு தொகுதியினர் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருகை தந்துள்ள இவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் ஆளுநர் றெஜினோல்ட் குரே மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
குறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.
யுத்தத்திற்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பாக ஆளுநரின் ஊடகப்பிரிவினால் விரிவான கானொளி புலம்பெயர் நாடுகளிலிருந்து வருகை தந்திருந்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் வடமாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்காக புலம்பெயர் வாழ் உறவுகளின் உதவியினை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான முயற்சிகளில் தனது முழு ஆதரவினையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது இங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் யுத்தம் காரணமாக மிகவும் மன அளவிலும் பொருளாதாரத்திலும் நலிவுற்று காணப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக புலம்பெயர் உறவுகள் ஆக்கபூர்வமான பணிகளை ஆற்ற வேண்டும் என்றும். வேலையற்று நிர்க்கதியாக இருக்கின்ற இளைஞர் யுவதிகளுக்காக வட மாகாணத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்பினை வழங்க புலம்பெயர்ந்து வாழும் செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர்;, இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஜனாதிபதியின் வடக்கு மற்றும் கிழக்குக்கான இணைப்பாளர் டொக்டர் கோல்டன் ஏஸ்எஸ்கே நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன், நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் யாழ் வரவு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.