குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மிகப் பெரியளவில் போதைப் பொருள் கடத்தல்களை நெறிப்படுத்தி வருபவர்கள் எனக் கூறப்படும் கைதிகளுக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை கொண்டு வரவும், போதைப் பொருள் கடத்தலை சிறையில் இருந்து மேற்கொள்ளவும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விநியோகம் செய்யவும் இந்த அதிகாரிகளின் உதவியும் ஆலோசனையும் கிடைத்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறைச்சாலைக்குள் இருந்து போதைப் பொருள் கடத்தலை வழிநடத்தி வரும் கைதிகளிடம் இந்த அதிகாரிகளுக்கு தினமும் 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. அத்துடன் இந்த அதிகாரிகளின் வீடுகளில் நடக்கும் வைபவங்களுக்கு, சிறையில் இருக்கும் கைதிகளின் சகாக்களே உதவியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கைதிகள் இடையில் இருந்து வரும் மோசடியான தொடர்புகளை கவனத்தில் கொண்டு, நீதியமைச்சர் தலதா அத்துகோரள அண்மையில், சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை கலைத்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.