கலாநிதி.சி.ஜெயசங்கர்
(மாமாங்கத்திருவிழாச் சூழலில்5ஃ8ஃ2018 காலை பத்துமணிக்கு தொடக்க வைபவத்தடன் ஆரம்பமாகும் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையின் 7வது பாரம்பரிய விழாவை முன்னிட்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.)
மாமாங்கம், பண்பாட்டு வேர்களின் ‘மி. கூத்துப் பாரம்பரியம் கொண்ட கலை வெளி. மாமாங்கம் திருவிழா தமிழர்களின் பண்பாட்டுப் பெருவிழா. கிராமிய, தொல்சீர் கலைகளுடன் நவகலைகளும் சங்கமிக்கும் கலைத் திருவிழா. உள்ளூர் உற்பத்திகளின் மிகப்பெரும் விற்பனைக்களம். சமூகப் பண்பாட்டுக் கற்கைகளுக்கான அறிவியல்வெளி எனப் பல்வேறு பரிமாணங்களையும் பெற்றியங்குவது மாமாங்கத் திருவிழாச் சூழல்.
நகர்சார் மற்றும் கிராமம்சார் மனிதர்களின் சங’கமிப்பாக அமையும் இத்திருவிழாச் சூழல் அதிக மக்கள் பங்கேற்பிற்கும், கவனத்திற்கும் உரியதாக காணப்படுகிறது. இத்தகையதொரு சூழலில் எமது பண்பாட்டுப் பாரம்பரியங்களின் அம்சமாகக் காணப்படுகின்ற பாரம்பரிய ஆற்றுகைகளையும்ஃ அவை ஆற்றுகை செய்யப்படும் இயல்பான அரங்கையும் அமைத்து, கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையால் பாரம’பரிய அரங்க விழா மாமாங்கம் ஆலய வளாகத்தில் தொடங்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை ஆரம்பித்த இந்த அரங்க விழா கோயில் வண்ணக்கர்கள் மற்றும் ஆர்வலர்களின் மிகப்பெரும் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு ஏழாவது பாரம்பரிய அரங்க விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் மிகஅதிகளவில் தொடர்ந்து ஆற்றுகை செய்யப்பட்டுவரும் பாரம்பரியக் கலைகள் பிரதான ஓட்டமான நகர்சார் வெளிகளுக்குள் கொண்டுவரப்படாமல் அவை அருகிவிட்டன, செம்மையற்றன, அழகியல் தன்மையற்றன என்ற கதையாடல்கள் பாடப்புத்தகங்களிலும் மற்றும்வெகுசன ஊடகங்களிலும் கட்டிவிடப்பட்டுக் கொண்டிருந்தன.
பிரசித்தமான அண்ணாவிமார்கள், புலவர்கள், வாத்தியக் கலைஞர்கள், ஆற்றுகைக் கலைஞர்கள், உடை ஒப்பனைக் கலைஞர்கள், கதை சொல்லிகள், கவிபாடிகள் எனப் பல நூற்றுக்கணக்கான கலைஞர்களும் அறிஞர்களுமான ஆளுமைகள் பாமரர்களாகவும் குடிகாரர்களாகவுமே ஆய்வுக் கட்டுரைகளிலும், கட்டுரைகளிலும், பாடப்பரப்பிற்குள்ளும் சித்தரிக்கப்பட்டிருந்தனர். 1960கள் தொடக்கம் 1990கள் வரையில் எழுதப்பட்ட கட்டுரைகள், நூல்கள் என்பவற்றில் பாரம்பரிய கலைஞர்கள் மீதான இத்தகைய சிறுமைப்படுத்தல்களை மிகவும் பரவலாக காணமுடியும்.
ஆனைக்குட்டி, நாகமணிப்போடி,நோஞ்சிப்போடி போன்ற பெரும் கலை ஆளுமைகளின் இருப்புக்கள், இறப்புக்கள் பெரும் சமூகப் பங்கேற்புடன் அவர்களது வாழிடங’களில நிகழினும் அவை அந்தந்தச் சூழல்களிலேயே அடங்கிப் போய்விட்டிருக்கின்றன. புலமைத்துவச் சூழலின் திரிபுபடுத்தல்கள், வெகுசன ஊடகங்களின் கவனிப்பின்மை என்பவற்றைத் தாண்டி யதார்த்தத்துள் இறங்கிய பொழுதுதான் பொய்மைத் தோல்களை அகற்றி உண்மையை அறிய முடிந்தது. நேரடி அனுபவங்களற்ற அறிதலும் ஆய்தலும் ஏட்டுச்சுரக்காய்களையே பெருக்குவதாக இருப்பதைக் காணமுடியும்.
மாறாக நேரடிச் சந்திப்புக்கள், ஆற்றுகைகள் மற்றும் ஆற்றுகைப் பயில்வுகளுடன் அந்தந்தச் சூழல்களில் சந்திப்புகளையும் உரையாடல்களையும் நிகழ்த்தும் போதுதான் யதார்த்தம் புலப்படத் தொடங்குகிறது.
1940களில் இருந்து 2010 வரையான தரவுகளின் படி வருடா வருடம் சராசரியாக 60-65 கூத்துக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆடப்பட்டு வந்திருக்கின்றன. இன்றும் 80க்கு மேற்பட்ட அண்ணாவிமார்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மாண்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றி தற்போது பரவலாக அறியப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கலை வளம் கொண்ட கலை ஆளுமைகள் நிறைந்த சூழலிலும் இவைகளை இல்லையென்று எழுதிக்கொண்டிருப்பதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் எதுவென்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
மேற்படி நிலைமைகளைப் பல்வேறு வழிகளிலும் எதிர்கொண்டு பாரம்பரியக் கலைகளின் இருப்பையும் சமகாலச் சமூகப் பண்பாட்டியக்கத்திற்கு அவற்றின் தேவைகளையும் உணர்ந்தறிந்து முன்னெடுத்துவரும் பல்வேறு செயற்பாடுகளில் மாமாங்கத் திருவிழா வெளியுடன் இணைக்கப்பட்ட பாரம்பரிய அரங்க விழா பாரம்பரிய கலைகளின் பட்டவர்த்தனமான இருப்பையும் சிறப்பையும் வெளிப்படுத்தும் களமாக இருக்கிறது.
உள்ளூர்க் கட்டடக்கலை மரபுகளான களரி, தோரணம் அமைக்கப்பட்டு பாரம்மபரியக் கலை ஆற்றுகைகளும் அவற்றுடன்சூழ பாரம்பரியக் கலைஞர்களுடனான திறந்தவெளிச் சந்திப்புக்களும் பாரம்பரிய அரங்க விழாவில் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன.
தோரணம் என்பது மிகவும் அற்புதமான கலைத்திறம் நிறைந்த கலை ஆக்கம். பொது மக்களின் கலைத்திறத்தையும் தொழில்நுட்ப ஆற்றலையும் புலப்படுத்தி நிற்பது. 18 வகைகளுக்கும் மேலான அலங்காரங்களைக் கொண்ட தோரண ஆக்கங்கள் தோரணத் திருவிழாக்களாக உள்ளூர்த் தெய்வ வழிபாட்டு விழாக்களுடன் ஒன்றிணைந்திருப்பதுடன். கலைத் திருவிழாக்களின் அலங்கரிப்பாகவும் அமைந்து பெருமை சேர்ப்பன.
கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் மாணவர்களும் கலைஞர்களும் ஆர்வலர்களும் இணைந்து முன்னெடுக்கும் பாரம்பரிய அரங்க விழா எனும் கலைச் செயற்பாடு உயர் கல்வி நிறுவனமான பல்கலைக் கழகம் சமூகங்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் அறிவுச் செயற்பாடகஅமைவதுடன் ஆய்வு ஆற்றுகைச் செயற்பாடாகவும் பரிமாணம் கொண்டிருக்கிறது.
பாமரர், படிப்பறிவற்றவர், குடிகாரர் என அடையாளப்படுத்தப்பட்டு பண்பாட்டுச் சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், உயர் கல்வி ஆய்வுகளுக்கு தகவல் வழங்கியாகச் சுரண்டப்பட்டவர்கள் உயர்கல்வி கற்றல் நடவடிக்கையின் பங்கேற்பாளர்களாக பரிமாணம் கொண்டிருக்கிறார்கள். கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத்துறையினதும் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தினதும் வருகைதரு கலைஞர்களாக அதிகார ‘ர்வமாக அழைக்கப்படுகிறார்கள்; செயல்நிலைப் பேராசிரியரகள்; என்ற வகையிலும் அழைக்கப்படுவதற்கான முன்னெடுப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த முன்னுதாரணம் விவசாயம், மீன்பிடி, மருத்துவம் எனப் பல்வேறு கல்வித் துறைகளுக்கும் மிகவும் பொருந்துவதாகும். இதுவே நூற்றாண்டு கால உள்ளூர் அறிவையும் உலக அறிவையும் இணைத்து சூழலுக்குப்பொருத்தமான புத்தாக்கங்களுக்கான சூழல்களை உருவாக்க முடியும் என்பது கருத்திற் கொள்ளப்பட வேண்டியது.
பாரம்பரியமான அறிஞர்கள் கலைஞர்களுடன் புளங்கும்பொழுது அவர்களது அறிவு திறன் பெறுகையின் பல பரிமாணங்களையும், அவர்களது பல்துறை ஆளுமைகளையும் அறிந்து கொள்ள முடியும். அண்ணாவியராக இருக்குமொருவர் ‘சாரியாக இருப்பார், வெள்ளாமைக்காரராக இருப்பார், வைத்தியராக இருப்பார்,ஓடாவியாராக இருப்பார், வாத்தியக் கருவிகள் செய்பவராக இருப்பார், தோணி கொத்துபவராக, சொர்ணாழி ஊதுபவராக, பட்டிக்காரராக,பாட்டுக்கட்டுபவராக, கவிபாடுபவராக என இது விரிந்து செல்லும்.
இவர்களை இவ்வாறு பல்துறை ஆளுமையாளராக உருவாக்கிய சூழல்கள் எவை? இவர்கள் ஏன் படிப்பறிவற்றவர், பாமரர் என அழைக்கப்படுகிறார்கள்? யார் அழைக்கிறார்கள்? இவர்கள் பல்கிப் பெருகி இருக்கும் பொழுதும் இவர்களது இருப்பு ஏன் கவனத்திற்கு வராமல் போகிறது அல்லது மறைக்கப்படுகிறது? இவ்வாறான மறைப்புகளை செய்பவர்கள் யார்? அவர்களது நோக்கங்கள்தாம் என்ன? கவனத்திற்கு வராமல் போவதன் காரணங்கள்தாம் எவை? என்பது பொது வெளிக்கு வரவேண்டியது. ஏனெனில் இதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார, பண்பாட்டு நாசங்கள் பாரதூரமானவை. இந்த நிலைமைகளை உரையாடலுக்குக் கொண்டுவரும் அறிவு வெளியாகவும் பாரம்பரிய அரங்க விழா வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
கலாநிதி.சி.ஜெயசங்கர்