பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகன்களை கைது செய்ய பாகிஸ்தான் காவல்துறையினர் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். லண்டனில் சட்டவிரோதமாக சொத்துகளை வாங்கியமை தொடர்பாக நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு நவாஸுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இருவரும் ராவல்பிண்டியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏனைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நவாஸின் மகன்கள் ஹாசன், ஹூசேன் ஆகியோர் லண்டனில் தங்கியுள்ள நிலையில் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.இந்தநிலையில் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்துவதற்காக சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியை போகிஸ்தான் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
இதேவேளை தமக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நவாஸும் மரியமும் லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது