“மீண்டும், மீண்டும் எமது மக்கள் மீதே சரிந்து விழுவதற்கென்றே, மீதொட்டமுல்ல குப்பை தேங்கிக் கிடக்கின்றது”
சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றின் கூற்றுக்களை அவை சார்ந்த நிறுவனங்கள் செவிசாய்க்காத ஒரு நிலை தொடர்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. . இவ்வாறான நிலையில் எதற்காக இத்தகைய ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன எனவும், அதற்கென மக்கள் பணத்தினை ஏன் வீண் விரயம் செய்ய வேண்டும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி உள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று, பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“அனைத்துத் துறைகள் சார்ந்தும் மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பிரச்சினைகள் சார்ந்து ஆராயவென நியமிக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுவினதும் பரிந்துரைகள் உரிய முறையில் இதுவரையில் செயற்படுத்தப்படவில்லை என்பதை இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.
2006 ஆம் ஆண்டு உதலாகம ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டு மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல. எனினும், எமது மக்களின் ஓரளவு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காவது சில சாதகமான பரிந்துரைகளை செயற்படுத்தியிருந்தாலே இன்று எமது மக்கள் இத்தகைய பாரிய பிரச்சினைகள் பலவற்றுக்குள் தொடர்ந்தும் சிக்குண்டுக் கிடக்க மாட்டார்கள். இப்போது எமது மக்களது பிரச்சினைகள், மீதொட்டமுல்ல குப்பை மேட்டைப் போல் மீண்டும், மீண்டும் எமது மக்கள் மீதே சரிந்து விழுவதற்கென்றே தேங்கிக் கிடக்கின்றன” என தெரிவித்துள்ளார்.