யாழ்ப்பாணம் – தென்மராட்சி, நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கின்ற மக்களை அரச காணியில் இருந்து வெளியேற்றுவதற்காக தேசிய வீடமைப்பு அதிகார சபையால் தொடரப்பட்ட வழக்கு இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சுமார் 62 குடும்பங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 34 குடும்பங்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ் வழக்கில் குடியிருப்பாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
குறித்த விடயம் தொடர்பாக வீடமைப்பு அமைச்சரோடு பேசி சுமூகமான முறையில் நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு நீண்ட தவணை ஒன்றை வழங்குமாறு சட்டத்தரணிகளால் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதிக்கு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.