குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுவதற்கான நடமாடும் சேவை இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையும் இடம்பெற்ற அதே வேளை, நாளை திங்கட்கிழமயும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையும் குறித்த சேவைகள் இடம் பெற உள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒபர் சிலோன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த நடமாடும் சேவை ஆரம்பமாகியுள்ளது. இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்,மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி இந்து சமய அலுவல்கள் அமைச்சு ஆகியவை இணைந்து புலம் பெயர்ந்து நாடு திரும்பிய மக்களுக்கான தூதரக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் ஆரம்பமான குறித்த நடமாடும் சேவையின் போது ஒபர் சிலோன் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகாசன், மன்னார்,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு , மடு ஆகிய 5 பிரதேசச் செயலக பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலகர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயண் பெற்றுக்கொள்ளவுள்ள புலம் பெயர்ந்து மீண்டும் மன்னார் மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
புலம் பெயர்ந்து சென்று மீண்டும் நாடு திரும்பி மன்னார் மாவட்டத்தில் வசித்து வரும் மக்கள் குறித்த ஆவணங்களை பெற்றுக்கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் துரித கதியில் குறித்த ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த நடமாடும் சேவை இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.