சிறைக்கைதிகளின் பிரச்சினைகளை பொறுமையாக அணுகி தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.மாறாக முன்னைய அரசாங்கத்தைப் போல் “சிறைக்கைதிகளை சுட்டுக்கொல்லபோவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தினபுரியில், புதிய நீதிமன்ற கட்டடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “இந்த நாட்டில் சகலருக்கும் சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்கார்களை நாம் சுட்டுக்கொல்லபோவதும் இல்லை. அதேநேரம் அவர்களின் தேவைக்காக எமது தீர்மானங்களை மாற்றிக்கொள்ளப் போவதும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மேல் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சிறைக்கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நான்கு பேர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு காயமடைந்த நான்கு பெண் சிறைக் கைதிகளையும் சிகிச்சைக்காக கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.