முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோரை கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு சிறப்பான பயிற்சியாளர்கள் பெயரை பரிந்துரை செய்யும் இந்த ஆலோசனைக் குழுவிற்கு சம்பளம் வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை முடிவு செய்துள்ளதனையடுத்து அவர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மூவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டால் பிசிசிஐ-யின் இரட்டைப் பதவி ஆதாயத்தில் இவர்கள் சிக்குவார்கள் என்பதனாலேயே இவ்வாறு நீக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கங்குலி மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் லஷ்மண் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக உள்ள அதேவேளை சச்சின் டெண்டுல்கரின் மகன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் ஏதாவது ஒரு பதவியை இவர்கள் இழக்க வேண்டும் என்பதனால் இவர்கள் மூவரும் அவர்களது பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.