துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டிப்பு வரிவிதித்ததை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு துருக்கியில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டநிலையில் ஆட்சி கவிழ்ப்பிற்கு திட்டம் தீட்டியதாக தெரிவித்து அமெரிக்க பாதிரியாரான ஆன்ட்ரூ பரன்சன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து துருக்கியின் நீதித்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதுடன் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் உலோகப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடையினால் ஆசிய வர்த்தகத்தில் எப்போதுமில்லா அளவிற்கு டொலருக்கு நிகரான துருக்கியின் நாணயத்தின் பெறுமதி கடும் சரிவை கண்டுள்ள நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது