மனித உரிமைகள் குறித்த தேசிய கொள்கையின் கீழ் தேசிய காவற்துறை ஆணைக்குழுவுக்கு விஷேட பொறுப்பொன்று வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி சட்டத்தரணி கலாநிதி மாரின்க சுமணதாஸ கூறினார்.
அதன்படி விஷேட பிரிவொன்றை அமைத்து காவற்துறையினரின் சித்திரவதைக்கு ஆளாவோர் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பது இதன்கீழ் இடம்பெறும் என்று அவர் கூறினார்.
கைது செய்யப்படுகின்ற நபர்களுக்கு காவற்துறையினரால் சித்திரவதை வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சம்பந்தமாக பிபிசியுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளை இலக்காக கொண்டு நாட்டில் மனித உரிமைகள் சம்பந்தமான தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று செயற்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாட்டு திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேசிய காவற்துறை ஆணைக்குழு ஆகியவற்றால் கூட்டுக் குழுவொன்றை இயங்குவதாக அவர் தெரிவித்தார்.