காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகமானது இம்மாதம் 30ஆம் திகதி பலவந்தமாக காணாமல் ஆக்கபட்டோருக்கான சர்வதேச தினத்தை அனுஷ்டிக்க தீர்மானித்துள்ளது.
அத்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பல்வேறுபட்ட பிரச்சினை தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் இடைக்கால அறிக்கையொன்றையும் அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளது.
இந்நிகழ்வு பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோரை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாயத்தின் இல.5 2018 சட்டத்தின் படி பங்குனி மாதம் 2018 இல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதையும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் 2018 மாசி மாதம் ஸ்தாபிக்கப்பட்டதையும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக செய்யப்பட்ட முயற்சிகள் என்பதை நினைவுபடுத்துகிறது.
ஜே.ஆர் ஜெயவர்தன மண்டபம், 191, அனாகரிக தர்மபால மாவத்தை, கொழும்பு 07 இல் பி.ப 3 மணி தொடக்கம் பி.ப 5 மணி வரை இம்மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் நிகழ்வில் காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடுகம பிரதம உரை ஆற்றவுள்ளார். அத்தோடு காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட குடும்பங்களின் உறவுகள் தங்களது கருத்துக்களையும் தெரிவிக்கவுள்ளனர்.