குழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிற பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அராஜகங்கள் தேவாலயங்களால் மறைக்கப்படுவதனை; கண்டித்து போப் பிரான்ஸிஸ் உலகில் உள்ள 1.2பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கடவுளின் மக்களுக்கான கடிதம் என குறிப்பிடப்பட்ட அக்கடிதத்தில், மரண கலாசாரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரியுள்ள அவர் தேவலாயங்களில் பாலியல் வன்முறைகள் குறித்து மறைக்கப்படுவற்கும் மன்னிப்பு கோராமல் இருப்பது குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பெனிசில்வேனியாவில் ஏழு வருட பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த வெளியான விசாரணை அறிக்கையில் 1000 சிறார்கள், 300 பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்தக் குற்றங்கள் தேவாலயங்களால் மறைக்கப்பட்டுள்ளன, அதில் சில வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு பழையதாகிவிட்டன என விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.இந்தநிலையிலேயே பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒட்டு மொத்த கத்தோலிக்கர்களுக்கும் போப் மேற்கண்டவாறு கடிதம் எழுதியுள்ளார்.
2000 சொற்களைக் கொண்ட அந்த கடிதத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற அந்த சம்பவம் குறித்து நேரடியாக பேசியுள்ள அவர், துரிதமாக செயல்பட தேவயாலம் தவறிவிட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். திருச்சபை சமுதாயமாக நாம் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்திருக்கவில்லை என்பதை வெட்கத்துடனும், வருத்தத்துடனும் ஒப்புக் கொள்வோம். பல உயிர்களின் வாழ்வில் ஏற்பட்ட சேதாரத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளாமல் துரித நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒட்டு மொத்த கத்தோலிக்கர்களுக்கும் போப் ஒருவர் கடிதம் எழுதியது இதுவே முதல்முறை என வத்திகான் தெரிவித்துள்ளது.