இந்திய பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்திய தேர்தல் முறையில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள் ‘நோட்டா’ என்ற வாய்ப்பை கையாள அனுமதிக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் சேர்ந்து வாக்களித்து பாராளுமன்ற மேல்சபையான மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.இதனை எதிர்த்து குஜராத் மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் ; உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மாநிலங்களவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வாக்களிக்கும்போது ‘நோட்டா’ முறையை பின்பற்றினால் குதிரை பேரத்துக்கும் ஊழலுக்கும் வசதியாகி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என தீர்பளித்துள்ளது.