பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் சகோதரரின் இறுதியைகிரியைகளில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு சென்றுள்ள சுப்பிரமணியன் சுவாமி மகிந்தவின் சகோதரரின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்திய பின்னர் மாத்தறையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் மெதமுலன இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச, சுப்பிரமணியன் சுவாமியை தான் வரவேற்றதாகவும், புதுடில்லியில் இடம்பெறவுள்ள நிகழ்வில் உரையாற்றுமாறு அவர் விடுத்த அழைப்பை தான் பெரும் கௌரவத்துடன் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் நீண்ட கால நண்பர் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அவர் விடுதலைப்புலிகளின் கொடிய பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதும் குரல்கொடுத்தவர் எனவும், இலங்கையின் சிறந்த நலன்களைப் எப்போதும் தனது இதயத்தில் வைத்திருப்பவர் எனவும் அந்த ருவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.