இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் தேசியக்கொடிகளை ஏந்தியபடி அந்த நாட்டிற்கு ஆதரவாக முழக்கமிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவம் மற்றும் காவற்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள் அடைக்கலம் கொடுப்பதுடன், காவற்துறையினர் மற்றும் ராணுவம் சென்றால் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் தேசியக்கொடிகளை காட்டுவதும், தீவிரவாத இயக்கத்தின் கொடியை காட்டுவதும் என அத்துமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது பாதுகாப்பு படைகளுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. சில சமயங்களில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் நேரடியாக மோதும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அனந்த்நாக் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தான் தேசியக்கொடிகளையும், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்க கொடிகளையும் ஏந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதுடன் பாதுகாப்புக்கு சென்றிருந்த காவற்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.