தங்களிடம் உள்ள வளங்களை வைத்தே கேரளாவை மறுசீரமைத்து கொள்ளவுள்ளதாக இந்தியா வெளிநாடுகளுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழங்கிய 700 கோடி ரூபாயை ஏற்க மறுத்த இந்தியா உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை ஏற்கனவே இந்தியா எடுத்துக்கொண்ட கொள்கை முடிவுக்கு ஏற்பவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரெட்சில் வாழும் சுமார் 28 லட்சம் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவும் வகையில் இந்த நிதியை தர தயாராக இருப்பதாக அபுதாபி இளவரசர் கூறினார். மாலத்தீவு, கத்தார், சீனா மற்றும் ஐ.நா. சபையில் இருந்தும் நிதி உதவி தர இருப்பதாக மத்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கைரீதியான முடிவை எடுத்து இருப்பதால் அதனைப் பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
நிதி உதவி செய்ய முன் வந்த ஐக்கிய அரபு எமிரெட்ஸ், மாலத்தீவு, ஐ.நா. சபைக்கு இந்தியா சார்பில் ‘நன்றி’ தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாடுகளிடம் பணத்துக்கு கை ஏந்துவதை 2004-ம் ஆண்டே இந்தியா நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.