வடக்கில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மீண்டும் உருவாக்குவதற்காகவே சிங்கள மகா வித்தியாலயத்தை மீள ஆரம்பிக்க வேண்டுமென, அப்பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய தாம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை (26.08.18) நடைபெற்ற சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலின்போதே, அவ்வாறு தெரிவித்தனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , சுமார் 30 வருடங்களின் பின்னர், பல மாவட்டங்களிலும், வெளிநாடுகளிலிருந்தும் ஒன்று கூடிய சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பாடசாலையை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில், ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர், தமிழ் , சிங்களம், முஸ்லீம் , போறா , மலே மற்றும் பறங்கியர் என ஆறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளனர். இதன்போது, ஆறு இன மாணவர்களும் கல்வி பயிலும் போது, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன், கல்வியை கற்றனர்.
மாணவ பருவத்தில் இருந்த போது, இன, மத வேறுபாடுகளை தோற்றுவிக்காததுடன், யார் எந்த இனத்தவர்கள் என்று தெரியாத அளவுக்கு இப்பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
எனவே, வடக்கு மாகாணத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த, சிங்கள மகா வித்தியாலயம் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து, இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், சிங்கள மகா வித்தியாலயத்தை மீளவும் இயக்குவதற்காக, நோக்கத்துடன் இந்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பாக இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லிணக்கத்தைப் பற்றி பேசியதை காணமுடியவில்லை.
நல்லிணக்கத்தை உருவாக்க முதன்முதலில் பாடசாலை ஒன்றை உருவாக்க வேண்டும். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக முன்னர் இயங்கிய இந்தப் பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர், பாடசாலை எரிக்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வந்த போது, பாடசாலையை விட்டு வெளியேறினோம்.
மீண்டும் இப்பாடசாலையை ஆரம்பித்து எமக்குள் இருந்த ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் – சிங்கள மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்றார்கள்.
வடக்கிலும் அந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலையை மீள ஆரம்பிப்பதன் மூலம் ஒற்றுமையும் நல்லிணக்கமும் தானாகவே உருவாகும் என தெரிவித்தனர்.