(எம்.மனோசித்ரா)

சீனா தனது பட்டுப்பாதை திட்டத்திற்காக பல நாடுகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்து மா சமுத்திரத்தின் தெற்காசிய நாடுகளில் சீன திட்டங்கள் மிகவும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில நாடுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக அபிவிருத்தி திட்டங்களானது பல்வேறு சர்ச்சைகளுக்கும் காரணமாகியுள்ளது. அவ்வாறான ஒன்று தான் அம்பாந்தோட்டை துறைமுக திட்டமாகும்.

பல நாடுகளில் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும் தனது வெளிப்படை தன்மையை காண்பிக்கும் வகையிலும் சீனா தற்போது செயற்பட தொடங்கியுள்ளது.

இதனடிப்படையில் , சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தின்,கீழ் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கையின் தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக கொழும்பு ஊடகவியலாளர்கள் சிலரை சீன தூதரகம் அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்றது. அதன் போது கீழ் வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

மாத்தறை – கதிர்காம புகையிரத பாதை நீடிப்பு திட்டம் (மாத்தறை – பெலியத்த பிரிவு)

சீன தேசிய இயந்திர ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனம் இலங்கையில் மேற்கொள்ளும் வேலைத்திட்டமாக மாத்தறை – கதிர்காமம் புகையிரத பாதை நீடிப்பு திட்டம் காணப்படுகின்றது. இதற்காக சீன எக்ஸிம் வங்கி 278 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடன் முறையில் வழங்கியுள்ளது.

சீனாவின் இவ்வாறான புகையிரத பாதைத்திட்டம் இலங்கையின் தென் பகுதி மற்றும் கிழக்கில் நிருவப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டமாக மாத்தறை – கதிர்காமம் புகையிரத வீதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்காக அமைக்கப்படும் புதிய திட்டமான இது 127 கிலோ மீற்றர்களாகும். இலங்கையின் தென் பகுதி புகையிரத திட்டத்தின் ஒப்பந்தக்காரர்களாக சீன தேசிய இயந்திர ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனம் காணப்படுகின்றது.

100 வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் தென் பகுதியில் மேற்கொள்ளப்படும் புகையிரத திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும். இது முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கதிர்காமத்தையும் இணைக்கும் வகையில் காணப்படும்.

இப்புகையிரத பாதையின் நீளம் 26.75 கிலோ மீற்றர்களாகும். இப்பாதையில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். ஒற்றைவழிப்பாதையான இதன் அகலம் 1676 மில்லி மீறறர் ஆகும்.

மேலும் இலங்கையில் நீளமான புகையிரத பாலம் மற்றும் இரண்டாவது நீளமான பாலம் என்பன இத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நீளம் முறையே 1.5 கிலோ மீற்றர் மற்றும்  1.04 கிலோ மீற்றர்களாகும். இதே வேளை இலங்கையின் பெரிய புகையிரத சுரங்கமும் இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 615 மீற்றர்களாகும். இதன் மூலம் சுமார் 1500 வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

அம்பாந்தோட்டை துறைமுகம்

பூகோள அரசியலில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உட்பட்டதாக அம்பாந்தோட்டை துறைமுகம் காணப்படுகின்றது. சீனா இத் துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துமா என்ற அச்சமே இந்த சர்ச்சைகளுக்கு காரணமாகும். அந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையிலும் தனது வெளிப்படைத் தன்மையை காண்பிக்கும் வகையிலும் இத் துறைமுகத்திற்கு சீன தூதரகம் ஊடகங்களை அழைத்துச் சென்றது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள 99 ஆண்டு காலத்திற்கான அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் பிரகாரம் இங்கு செயற்கை தீவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக நிலப்பரப்பில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு குறித்த செயற்கை தீவு அமைக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட இந்த தீவு 110 ஹெக்டெயர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேலும் இலங்கையின் தென் பிராந்திய கடலை கண்காணிப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுக நிர்வாக கட்டடத்தில் 12 ஆவது மாடியில் சிறப்பு கண்காணிப்பு மையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இத் துறைமுகத்திற்குள் இலங்கை கடற்படை உட்பட மூன்று பாதுகாப்பு கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

இத் துறைமுகத்தை அமைப்பதன் மூலம் இலங்கைக்கு கடற்துறை போக்குவரத்து மூலம் கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியை அதிகரிக்கப்படுவதோடு இதன் காரணமாக பொருளாதாரத்தில் பாரிய அபிவிருத்தி ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதே வேளை வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புக்களும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இதன் மூலம் பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன் பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

தெற்கு அதிவேக பாதை

அம்பாந்தோட்டை பிரதேசத்தின் வீதி கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதை நோக்காக் கொண்டு மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக அந்தரவெவ வரையான அதிவேக வீதி அமைக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை இணைக்கும் வகையில் இவ் அதிவேக வீதி அமைக்கப்படவுள்ளது. இதன் நீளம் 25 கிலோ மீற்றர்களாகும். இது 4 ஒழுங்கைகளையும் 12 மேம்பாலங்களையும் 71 பாலங்களையும் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவ் வீதியில் மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்கும்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட இவ் வீதி அமைப்பு 36 மாத கால நிர்மாண கால எல்லையைக் கொண்டதாகும். அதன்படி அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இவ் வீதி பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக 412 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 85 வீதம் சீன எக்ஸிம் வங்கி 2 வீத வட்டியின் அடிப்படையில் கடனாக வழங்கியுள்ளது. வேலைத்திட்டம் பூர்த்தி அடைந்த பின்னர் 15 வருட தவணைகளில் கடன் மீள செலுத்தப்படும்.

சூரியவெவ நீர் சுத்திகரிப்பு ஆலை

இலங்கை கடற்படையினரின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவு சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய சீனாவின் முழுமையான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சூரியவெவ கிராமத்தில் நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை இலட்சம் ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குடி நீர் மற்றும் விவசாயத்திற்கான சுத்திகரிக்கப்பட்ட நீரை பிரதேசவாசிகள் இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர். பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் ஆகியோரால் கடந்த ஜூலை மாதம் இந் நீர் சுத்திகரிப்பு ஆலை மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது.