மியான்மரில் ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை இன அழிப்பாக குறிப்பிட்டுள்ள ஐ.நா. மனித உரிமை சபை அந்நாட்டின் ராணுவ தளபதி பதவி விலக வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் 2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மியான்மரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வன்முறை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மியான்மர் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
மியன்மாரின் ரக்கினே மாநிலத்தில் வாழும் சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது. கடந்த வருடம் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சுமத்தியுள்ளன.
மேலும் உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் பங்களாதேசுக்கு தப்பிச் சென்றுள்ள அதேவேளை ரோஹிங்கியா பெண்களை மியன்மார் ராணுவத்தினர் கொடூரமான முறையில் வன்புணர்வுக்குட்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அண்மையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பேரவையைச் சேர்ந்த தூதர்கள் பங்களாதேஸ் சென்று அங்கு அகதிகள் முகாமில் தங்கியுள்ள ரோஹிங்கியா மக்களை நேர்காணல் செய்திருந்ததுடன் மியன்மாரில் உள்ள ரக்கினே மாநிலத்துக்கும் சென்று ஆய்வு செய்திருந்தனர்.
இதனையடுத்து மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை மீறிய வகையில் நடந்ததாக கூறப்படும் ராணுவத்தின் அத்துமீறல்கள் மற்றும் வன்புணர்வுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைதொடர்ந்து, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் பேரவவையின் மனித உரிமை துறை தலைமையகத்தின் சார்பில் மார்ஸூக்கி தருஸ்மான் தலைமையில் சர்வதேச நடுவர்களை கொண்ட சுதந்திரமான உண்மையறியும் குழு நியமிக்கப்பட்டடது. இந்த குழுவினர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ரோஹிங்கியா மக்கள் மீது நடத்தப்பட்ட ராணுவ தாக்குதல் இன அழிப்பு நோக்கத்தில் நடைபெற்றுள்ளது. ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தொபிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் நகல் மியான்மர் நாட்டு அரசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக மியான்மர் அரசு சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.