குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
பருத்தித்துறையில் இருந்து கேவில் செல்லும் பேருந்து , கட்டைக்காடு சந்தியுடன் திரும்புவதனால் பயணிகள் சிரமங்களை எதிர்நோக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பருத்தித்துறை சாலைக்கு (டிப்போக்கு) சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து பருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு கேவில் பகுதி வரையில் சேவையில் ஈடுபடுகின்றது.
குறித்த பேருந்து தற்போது கேவில் வரை செல்லாது , கட்டைக்காடு சந்தியுடன் தனது சேவையை இடை நிறுத்தி, அங்கிருந்து மீண்டும் பருத்தித்துறை வரையில் சேவையில் ஈடுபடுகின்றது.
இதனால் கேவில் பகுதிக்கு செல்லும் மக்கள் கட்டைக்காட்டு சந்தியில் இருந்து சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் நடந்து அல்லது வேறு வாகனங்களில் பயணிக்கின்றனர். அதனால் அவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.
பேருந்து சேவை இடை நடுவில் நிறுத்தப்படுவது தொடர்பில் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முறையிட்ட போதிலும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதேவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகளை ஒழுங்காக நடாத்தா விடின் தமக்கு தனியார் பேருந்து சேவை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.