வடக்கில் காணப்படுகின்ற இராணுவ சின்னங்களை எச்சந்தர்ப்பத்திலும் அகற்ற முடியாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள், யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இன்னும் இராணுவ சின்னங்களை காணப்படுவதாகவும் அவற்றை அகற்ற வேண்டுமென கோரி வருகின்றனர். இவ்வாறு ஒருசில கருத்துக்களுக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது. மேலும் இராணுவ சின்னங்களை அகற்றவேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் சில கடும்போக்கு அரசியல்வாதிகள் தான் தங்களுடைய நலன்களுக்காக இவ்வாறு தெரிவித்து வருகின்றனர் எனவும் அவர்களது செயற்பாடுகளால் மக்களிடைய நல்லிணக்கம் பாதிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்த ருவான் விஜேவர்தன, தமிழீழ விடுதலைபுலிகளை மீண்டும் புதுப்பிக்க ஒரு சிலர் நினைப்பார்களாயின் அவ்விடயம் தொடர்பில் மிகவும் பலம் வாய்ந்த தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.