திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள நகை, ஆபரணங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களின் விவரங்களை நான்கு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ள ரகசிய நிலவறையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக முன்னாள் தேவஸ்தான தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் எழுப்பியிருந்த குற்றச்சாட்டுகளை தேவஸ்தானம் மறுத்திருந்தது.
இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த சிலர்; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஏழுமலையானிடம் உள்ள ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருள்கள், தேவஸ்தானத்தின் வருவாய் உள்ளிட்டவற்றை அறியும் உரிமை அனைவருக்கும் உள்ளது என ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
அதை விசாரித்த நீதிபதிகள், தேவஸ்தான அதிகாரிகள் இது குறித்த விரிவான அறிக்கையை உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த நிலையில் அந்த வழக்கின் 3-ஆம் கட்ட விசாரணை நேற்று இடம்பெற்றது.
எனினும் அறிக்கையை சமர்ப்பிக்க தேவஸ்தானம் காலக்கெடு கேட்டதனையடுத்து 4 வார காலக்கெடுவை அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.