இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்புக்கு பாராட்டு தெரிவிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நேபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியம் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது ஜனாதிபதியுடன்; சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய பிரதமர், பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்படும் எந்தவொரு பணியையும் உரியவாறு நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பு பெரிதும் பலப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த இந்திய பிரதமர், அதனூடாக பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கினையும் குறிக்கோளையும் அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.