இந்தியாவில் அவசர நிலை நிலவிய காலத்தில் திமுகவின் பங்கு அளப்பரியது. தங்களது கொள்கைகளுக்காக அவசர காலத்தின் போது திமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. அந்த வகையில் ஜனநாயகத்தை பாதுகாத்ததில் கருணாநிதிக்கு பெரும் பங்கு உண்டு என, இந்திய மத்திய நீர்வளம் மற்றும் தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கருணாநிதியை புகழ்ந்துள்ளார்.
தெற்கில் உதிக்கும் சூரியன் என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையயாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கருணாநிதி ஒரு முற்போக்கு சிந்தனையாளராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். மறைந்த பிரதமர் வாஜ்பாயுடன் அவர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர்கள் இருவரும் கடுமையாக உழைத்தனர்.
இந்திய வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டமை கருணாநிதிக்கு மட்டுமே. இந்த சிறப்பை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அவருக்கு வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். இந்த புகழஞ்சலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜக சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தேசிய செயலாளர் முரளிதரராவ், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத் எம்.பி., தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், புதுச்சேரி முதல் மந்திரி நாராயணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.