ஊழல் வழக்கு தொடர்பில் சிறையிலுள்ள பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியான 72 வயதான லூயிஸ் இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula Da Silva) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரேசிலில் எதிர்வரும் ஒக்டோபர் 7-ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் லூயிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் லூயிஸ் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக் கோரி தேர்தல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதனை நீதிபதிகள் அமர்வு அவருக்கு போட்டியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. லூயிஸின் பல்வேறு மேல் முறையீட்டு மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் தெரிவித்திருந்த போதும் அதனை தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.எனினும், இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லூயிஸின் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் கடந்த 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை லூயிஸ் இனாசியோ லூலா ஜனாதிபதியாக பதவி வகித்த நிலையில் அவரது ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தது. எனினும் அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக முறைப்பாடு எழுந்தததனை தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில் இதில் அவரின் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது