லிபியாவின் தலைநகரான திரிபோலியில் போராளி குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்களினைத் தொடர்ந்து அந்நகரின் அருகே உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.இதனையடுத்து அங்கு லிபியா அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.
அய்ன் ஜாரா என்ற அந்த சிறையின் கதவுகளை உடைத்து அவர்கள் வெளியேறியுள்ளதாகவும் தப்பியோடுபவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக்காவலர்களால் அதன் பின்னர் சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் தடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆயுதம் தாங்கிய இரு ஆயுதக்குழுக்கள் ஆண் கைதிகள் மட்டுமே உள்ள இந்த சிறை வளாகம் அருகே கடுமையாக மோதிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு;ளளது. இந்த சிறையில் உள்ள கைதிகள் பெரும்பாலும் காலஞ்சென்ற லிபிய தலைவரான கடாபியின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது.
இதேவேளை லிபியாவின் தலைநகரில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் வாழ்ந்துவரும் ஒரு முகாமின் மீது நேற்றையதினம் ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக திரிபோலியில் நடந்து வரும் போராளி குழுக்களை இடையேயான மோதல்களில் உள்ளூர்வாசிகள் உள்பட 47 பேர் உயிரிழந்துள்ளதாக லிபியாவின் சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது