குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு- குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிதயில் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தில் தமிழ் மன்னர்கள் வாழ்ந்த வரலாற்று எச்சங்களுடன் குருந்தூர் மலை காணப்படுகின்றது. இந்த மலையை ஆக்கிரமிப்பதற்கு பல தடவைகள் முயற்சிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழமையான சிவன் ஆலயத்தை மக்கள் பராமரிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில், 4 வாகனங்களில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் தங்குமிடம் அமைப்பதற்கான வசதிகள், விகாரை அமைப்பதற்கான கட்டிட பொருட்கள், புத்தர் சிலை ஆகியவற்றுடன் குருந்தூர் மலைப்பகுதிக்கு வருவதை ஊர் மக்கள் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து ஒன்றுதிரண்ட மக்கள் தண்ணிமுறிப்பு கிராமத்திற்கு சென்று அங்கு தேடுதல் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து தண்ணிமுறிப்பு பகுதியை அண்டியுள்ள தண்டுவான் என்ற இடத்தில் வைத்து விகாரை அமைக்கவந்தவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடிக்க முயற்சித்தபோது சிலர் தப்பி ஓடியுள்ளனர்.
எனினும் 4 வாகனங்களில் வந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேர் மக்களால் பிடிக்கப்பட்டு தண்ணிமுறிப்பு குளத்திற்கு அருகில் கொண்டுவரப்பட்டனர். இதனையடுத்து சம்பவத்தை அறிந்த ஒட்டுசுட்டான் காவல்துறையினர் தண்ணிமுறிப்பு குளப்பகுதிக்கு வந்தனர். எனினும் தாம் விகாரை அமைக்கப்போவதாகவும், அங்கே இதற்கு முன்னர் விகாரை அமைந்திருந்ததாகவும் அவர்கள் கூறிக்கொண்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
எனினும் காவல்துறையினர் வந்ததால் அமைதி காத்தனர். இதனையடுத்து மக்களால் பிடிக்கப்பட்ட 12 பேரும் அவர்களுடைய வாகனங்களும், உடமைகளும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையினர் அவர்களை நாளை புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். நாங்களும் அவர்களை நாளை நிதிமன்றில் முற்படுத்தவேண்டும் என்பதையும், தண்ணிமுறிப்பு கிராமம் தமிழ் மக்கள் வாழும் பகுதி இங்கே ஒரு பௌத்தர் கூட இல்லாத நிலையில் விகாரை அமைப்பதை ஏற்று க்கொள்ள முடியாது என்பதையும் கூறியிருக்கின்றோம்.
இந்நிலையில் தாம் நீதிமன்றில் முற்படுத்துவோம். என காவல்துறையினா உறுதியாக கூறி பௌத்த பிக்கு உள்ளிட்ட 12 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றுள்ளனர்என தெரிவித்தார்.