பிரேசில் ஜனாதிபதித் தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவரான ஜயார் போல்சேனார்ரூ(Jair Bolsonaro) தேர்தல் பரப்புரை பேரணி ஒன்றில் வைத்து கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெராய்ஸ் ஜூய்ஸ் டிபோரா என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியில் வைத்து தீவிர வலதுசாரி அரசியல்வாதியான இவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்களுக்குள்ளான அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை, தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இனவெறிக்கு ஆதரவான மற்றும் ஒருபாலுறவுக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாடுகளால் சர்ச்சைக்குரிய இந்த அரசியல்வாதி, பிரேசிலிலுள்ள பலரையும் கோபத்திற்குள்ளாக்கியுள்ள நிலையில் அண்மைய தேர்தல்களில் சாதகமான முடிவுகளை பெற்றிருந்தார்.
ஊழல் வழக்கு தொடர்பில் சிறையிலுள்ள பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதியான 72 வயதான லூயிஸ் இனாசியோ லூலா த சில்வாவுக்கு அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் ஜயார் போல்சேனார்ரூ அதிகபடியான வாக்குகளை பெறலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.