2ஆம் இணைப்பு…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர். இதன்போதே நீதிவான் முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதி அரசர் விக்னேஸ்ரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையானார்..
Sep 7, 2018 @ 06:17
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றையதினம் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரனினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்ற நிலையில் முதலமைச்சர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த வட மாகாண முதலமைச்சர் அவர்களைப் பதவி நீக்கம் செய்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேற்கொண்ட மேன்முறையீட்டுக்கமைய விக்னேஸ்வரனின் தீர்மானத்துக்கு தடை விதித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனிஸ்வரனுக்கு மீண்டும் அந்தப் பதவியை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் குறித்த உத்தரவை செயற்படுத்தவில்லை எனவும் இதனால் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும் தெரிவித்து டெனிஸ்வரன் மீண்டும் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவிற்கு அமைய, சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தற்கமைய, சி.வி.விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.