குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் கலாசார விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முன்னதாக விருந்தினர்கள் பாரம்பரிய இசை வாத்தியங்களின் இசையுடனும், கும்மி, காவடி ஆட்டம் என்பவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.அத்தோடு சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகின்ற ஊர்தி பவணியும் இடம்பெற்றது.
வட மாகாண பண்பாட்டடலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து வருடாந்தம் நடத்தப்படுகின்ற இக் கலாசார விழாவில் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட கலைஞர் ஒருவர் கௌரவிக்கப்பட்டதோடு, விசேடமாக மாந்தை எழில் புகைப்படத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் காணப்படுகின்ற இயற்கை எழில்கள் மற்றும் வரலாற்று தொன்மையினை வெளிப்படுத்துகின்ற புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பான மாந்தை எழில் புகைப்படத் தொகுப்பினை பிரதேச செயலாளர் வெளியிட்டு வைக்க முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார். மேலும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் 2018 ஆம் ஆண்டுக்கான மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கலாசார விழா சிறப்பாக இடம்பெற்று நிறைவுற்றது