கைதிகள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேவி அகில்யாபாய் திறந்தவெளி காலனி என பெயரிடப்பட்ட இந்த சிறைச்சாலை மாவட்ட சிறைச்சாலைக்கு அருகிலேயே சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பில் செயல்படுகிறது.
முதல்கட்டமாக ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட திருமணமான 10 கைதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பெரும்பகுதி தண்டனை காலத்தை வேறு சிறைகளில் அனுபவித்து விட்டு, மீதி தண்டனையை அங்கு கழிப்பதற்காக, அவர்கள் அங்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு 2 அறைகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கு அவர்கள் மனைவி, குழந்தைகளுடன் தங்கிக் கொள்வதுடன் வெளியே வேலைக்கு சென்று உழைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காலை 8 மணிக்கு வெளியே சென்று மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும் என்பதுடன் நகர எல்லையை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை.
திறந்தவெளி சிறைச்சாலைக்கு 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு வருபவர்களின் பெயரை எழுதிய பின்னரே உள்ளே செல்ல அனுமதி வழங்குகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.