இலங்கையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நிலைமாறுகால நீதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மிகவும் மெதுவான நகர்வுகளையே மேற்கொண்டுள்ளனர் என, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் மிச்செலே பச்செலட் தனது முதலாவது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 அமர்வினை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய புதிய ஆணையாளர், காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தற்போதே மக்களின் கருத்துக்களை அறிய ஆரம்பித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் குறித்த அலுவலகம் துரிதமாக பணியாற்றவேண்டும் என ஐக்கியநாடுகள் சபை எதிர்பார்ப்பதாக வலியுறத்திய பச்செலெட் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிற்கு பதில்களை அலுவலகம் வழங்கவேண்டும், எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொறுப்புக்கூறுதல் மற்றும் உண்மையை கண்டறிவதில் அதிகளவு முன்னேற்றத்தை கண்டிருந்தால் நாட்டின் நிரந்தர ஸ்திரதன்மையும் செழிப்பும் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ள அவர், இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற இனவாத மற்றும் இனங்களிற்கு இடையிலான சம்பவங்கள் கவலையளிப்பதாகவும், இலங்கை குறித்த கரிசனைகளை வெளியிட்டுள்ளார்.