குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த குற்றத்துக்கு இளைஞர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. .
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது காவற்துறையினர் தொடுத்த வழக்கிலேயே இந்தத் தண்டனைத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
கோப்பாய் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றின் சூழலில் வாள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை சிறுவன் ஒருவன் எடுத்து சுழற்றியுள்ளார். சிறுவன் வாள் சுழற்றும் காட்சியை கைபேசியில் காணொலி எடுத்த அயலவர் ஒருவர், அதனை கோப்பாய் காவற்துறையிடம் வழங்கியுள்ளார்.
அந்தக் காணொலியை வைத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறையினர், வாள் வைத்திருந்த சிறுவனைத் தேடினர். இந்த நிலையில் மற்றொரு இளைஞர் சந்தேகத்தின் அடிப்படையில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரால் காண்பிக்கப்பட்ட இடத்திலிருந்து வாளும் மீட்கப்பட்டது. சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
கடந்த வாரம் சந்தேகநபருக்கு எதிரான வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. அதன் போது ஆலயப் பகுதியில் இருந்த வாளை எடுத்து மறைவான இடத்தில் வைத்தேன் என்று சந்தேகநபர் தாமக முன்வந்து குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.
அதனை அடுத்து அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தீர்ப்பளித்தார்.