முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரட்ண கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியைஇலங்கை அமைச்சரவை நிராகரித்துள்ளதாக எகனமி நெக்ஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுமுப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன கைதுசெய்யப்படுவதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவையின் விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.எனினும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதிக்கு இந்த விடயத்தில் ஆதரவு கிடைக்காததை தொடர்ந்து பிரதமர் நாடு திரும்பியவுடன் இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஆராய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிரதமர் வியட்நாமிலிருந்து நாடு திரும்பும் வரை இந்த விடயம் குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என அமைச்சர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஆள்கடத்தல்கள் படுகொலைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டாம் என சிறிசேன சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளிற்கு தெரிவித்துள்ளார் என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து மறுப்பு எதுவும் அரச தரப்பிலிருந்து வெளியாகவில்லை.
இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் முப்படைகளின் பிரதானிக்கு எதிரான ஆதாரங்களை சேகரித்துள்ளமை குறித்தும் அவரை கைதுசெய்வதற்கான நீதிமன்ற உத்தரவினை பெற்றுள்ளமை குறித்தும் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார்.கொழும்பில் தமிழ் இனைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் மறைந்திருப்பதற்கு உதவினார் என முப்படைகளின் பிரதானி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
1 comment
ஆள் கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இடம்பெறும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டாமென சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை வலியுறுத்தியதோடல்லாமல், இது போன்ற விசாரணைகளை முன்னெடுத்து இராணுவத்தை அசௌகரியங்களுக்கு உள்ளாக்க வேண்டாமெனப் பொலிஸாரையும் ஜனாதிபதி திரு. மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.
அப்போ, ‘பத்தொன்பதாம் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன, சுயாதீன விசாரணை ஆணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன’, என்று கூறியதெல்லாம் பொய்யா? இதுதான் நல்லாட்சித் தத்துவமா? என்னதான் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜனாதிபதி இருந்தாலும், குற்றச்சாட்டு என்று வந்தால் விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதைத் தடுப்பதென்பது, எந்த வகையிலும் நியாயமல்லவே?
ஜனாதிபதி மீதான மக்களின் அருவெறுப்புக்கும், கோபத்துக்கும் காரணம், இது போன்ற இவரது விவேகமற்ற நடவடிக்கைகளே, என்றால் அது மிகையாகாது. இவர் ஜனாதிபதியாகத் தெரிவானபோது, ‘ஊழல் செய்து அரச கஜானாவிலிருந்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ராஜபக்ஷர்கள்,/ ‘பூனையைக் கண்ட எலிகள் எலிவளைகளுக்குள் பதுங்குவது போல் பதுங்கியவர்கள்’, இன்று இவருக்கே குடைச்சலைக் கொடுக்கின்றார்கள் என்றால் அதற்கான காரணம் இவரேயன்றி வேறு யாருமல்ல! இவர் என்னதான் இராணுவத்தைத் திருப்திப்படுத்த முனைந்தாலும், அதில் வெற்றிபெறப் போவதில்லை, என்பதை மறுக்க முடியாது. மாறாக, தனது நேர்மையான நடவடிக்கைகளின் மூலமும், தான் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆதரவைப் பெற்று ஒரு நல்லாட்சியை நிறுவ முடியும்.
வீம்பு பேச்சுக்களும், முட்டாள் தனமான நடவடிக்கைகளும் இவரைக் காப்பாற்றாது. அன்று, திரு சரத் பொன்சேகாவுக்கும், பின்னர் இவருக்கும் தமிழ் மக்கள் வாக்களித்தார்கள், என்றால் அது இவர்கள் இருவரினதும் மேல்கொண்ட நல்லபிப்பிராயத்தில் அல்ல, என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லைப் போலும்? அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் மேல் எமக்கிருந்த வெறுப்புக் காரணமாக அவர்களை அகற்ற எமக்கு வேறு தெரிவெதுவும் இல்லாதிருந்தமையே காரணமென்பதை முதலில் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்று அவர்கள் செய்ததையே இவர்களும் செய்வார்களானால், எதிர்காலத்தில் இவர்களும் தூக்கியெறியப்படுவார்கள், என்பதை மறக்கக் கூடாது.