பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவிற்கு வெளிநாடு செல்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலி ஆவணங்களை பயன்படுத்தி அவுஸ்ரேலிய பிரஜை ஒருவரின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மேசாடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட போது, உதய கம்மன்பில சார்பான சாட்டத்தரணி விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் மாதம் 05ம் திகதி முதல் 10ம் திகதி வரையிலும், அதே மாதம் 14ம் திகதி முதல் 20ம் திகதி வரையிலும் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாகவும், அதனால் வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு உதய கம்மன்பில சார்பில் முன்னிலையான சாட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு தற்காலிகமாக பயணத் தடையை நீக்கி உத்தரவிட்டதுடன், நீதிமன்றின் கட்டுப்பாட்டில் உள்ள அவரது கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ உத்தரவிட்டுள்ளார்.