குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்திடம் 2880.08 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது..
யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 2880.08 ஏக்கர் நிலமே உள்ளது. இந்த காணிகள் மக்களுக்கு சொந்தமான காணிகளாகும். அவற்றை மக்களிடமே மீளவும் வழங்குவதில் இராணுவம் உறுதியாக இருக்கின்றது. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தின் வசம் 25 ஆயிரத்து 986.67 ஏக்கர் நிலம் காணப்பட்டது. குறித்த நிலத்தில் 88.80 வீதமான நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம் தற்போது மொத்தமாக 4512.82 ஏக்கர் நிலம் காணப்படுகின்றது. இது யாழ்.மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 1.39 வீதமாகும்.
இதேவேளை வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மட்டும் பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படையின் கீழ் உள்ள 996.74 ஏக்கர் நிலமும், இராணுவத்திடம் உள்ள 2032.19 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 3028.93 ஏக்கர் நிலம் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதேபோல் இராணுவத்தின் கீழ் உள்ள 500 ஏக்கர் நிலத்தை மக்களிடம் மீள கையளிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் மக்களுடைய நிலங்களை மக்களிடம் மீளவும் வழங்குவதில் இராணுவம் தெளிவாக உள்ளது. அதேசமயம் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களுடைய பாதுகாப்பிலும் இராணுவம் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் சிறு வன்முறை குழுக்களால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமா? என்பது குறித்தும் இராணுவம் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. இதனடிப்படையில் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல். தொடர்ச்சியாக மக்களுடைய நிலங்களை இராணுவம் விடுவிக்கும்.
இதேபோல் யாழ்.மாவட்டத்தில் பரவலாக உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஆனால் அவற்றை அகற்றி வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான பணம் எமக்கு தேவையாக உள்ளது. அது குறித்து நாங்கள் அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அவர்களிடம் இருந்து எமக்கு தேவையான பணம் கிடைக்குமாக இருந்தால் மக்களுடைய காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும் என தெரிவித்தார்.
தனிநாட்டு கோரிக்கை
இலங்கையில் வடக்கில் தான் தனிநாட்டு கோரிக்கையுடன் பெரிய அமைப்பு ஒன்று உருவாகியது. அதனாலையே அதிகளவான இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் ஏனைய பாகங்களில் தனிநாட்டு கோரிக்கையுடன் ஆயுத அமைப்புக்களோ . போராட்டங்களோ தோற்றம் பெறவில்லை. வடக்கில் தான் அவ்வாறு தோற்றம் பெற்றது. அதனால் மீண்டும் அவ்வாறான அமைப்புக்கள் போராட்டங்கள் தொடர கூடாது என்பதனால் தான் இராணுவம் வடக்கில் அதிகளவில் நிலை கொண்டுள்ளது. என தெரிவித்தார்.
அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் ஜே.வி.பி. தோற்றம் பற்றியும் , அதன் கலவரத்தின் போது கொல்லப்பட்ட அவர்களின் தோழர்களை அவர்கள் நினைவு கூறுவது அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போது, அவர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வில்லை. அவர்களிடம் தனிநாட்டு கோரிக்கை இருந்ததில்லை. ஆனால் வடக்கில் அந்த நிலைமை காணப்படவில்லை. வடக்கில் தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் தனிநாட்டு கோரிக்கையை கைவிடவில்லை. அதனால் மீண்டும் வடக்கில் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனும் நிலைமை உள்ளது என தெரிவித்தார்.
கோட்டை வேண்டும்
யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.
யாழில்,நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்க உள்ளோம். யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்க தயாராக உள்ளோம். இதற்காக ஜனாதிபதி , பிரதமர், தொல்லியல் திணைக்களம் ஆகியோரிடம் கோரிக்கைகளை விடுத்துள்ளோம். அதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.
இராணுவம் செய்யும் உதவிகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல.
இராணுவம் மக்களுக்கு செய்யும் சேவைகள் அரசியல் நோக்கம் கொண்டதோ, அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஸன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி படைத்தலமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவம் தெற்கில் உள்ள தொண்டு அமைப்புக்களுடன் இணைந்து வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்கள், பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள், மதங்களுக்கிடையிலான நல்லிணக்க திட்டங்கள், பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் அமைக்கும் திட்டங்கள், வீடற்றவர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டங்கள், மற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகள், அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்கும் செயற்றிட்டங்கள் என பல்வேறு செயற்றிட்டங்களை இன்றளவும் செய்து வருகின்றது.
இதேபோல் 10 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளார்கள், 10 ஆயிரம் மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதேபோல் யாழ்.மாவட்டத்தில் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்களின் பயந்தயம் போன்றவற்றை நடாத்தவும் இராணுவம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இராணுவம் மக்களுக்கு செய்யும் உதவி திட்டங்கள் அரசியல் நோக்கம் கொண்டதாக அல்லது யாரையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டதோ அல்ல. 30 வருடங்கள் இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மக்கள் அனுபவித்த துன்பங்களை கண்கூடாக பார்த்து அதன் அடிப்படையில் செய்யப்படும் உதவிகளாகும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்குவ தற்கு முயற்சிக்கின்றார்கள். அதன் ஒரு பாகமாகவே இந்த உதவித்திட்டங்கள் அமையும். எனவே நாம் வழங்கும் உதவி திட்டங்கள் தொடர்பாக சில ஊடாகங்கள் தவறான விமர்சனங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்றது.
உண்மைகளை அல்லது சரியானவற்றை சரியானவையாகவும், உண்மையானவையாகவும் மக்களிடம் சொல்லுங்கள். அதேசமயம் இராணும் எதாவது பிழைகள் புரிந்தால் அல்லது தவறான நடத்தைகளில் ஈடுபட்டால் அல்லது இன நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவை குறித்தும் நேரடியாக எமக்கு தெரியப்படுத்துங்கள் அவ்வாறானவர்களுக்கு இராணுவத்தில் தக்க தண்டணைகள் வழங்கப்படும்.
மேலும் நான் தெற்கில் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் மிக தெளிவாக கூறியுள்ளேன். வடக்கு மக்கள் குறித்தும், வடக்கு குறித்தும் தெற்கில் கூறப்படும் கருத்துக்களை அப்படியே நம்பாதீர்கள். உண்மையை அறிந்து கொள்ள வடக்குக்கு வாருங்கள், அங்குள்ள மக்களுடன் இயல்பாக பேசி உண்மைகளை அறியுங்கள் என்றும் கூறினேன். ஆகவே ஊடகங்கள் உண்மையை, நல்லவிடயங்களை நல்லபடியாக மக்களுக்கு சொல்லுங்கள் என மேலும் தெரிவித்தார்.