190
விஜய் சேதுபதி நடித்து வரும் `சீதக்காதி’ படத்தில் அவரது விவசாயியின் தோற்றம் எனக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தப் புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதி இல்லை என்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் என்றும் தெரிய வந்துள்ளது.
அந்தப் படத்தில் இருப்பவர் நெல்லை மாவட்டம் சிந்துபூத்துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இலக்கிய விமர்சகர் ஆசிரியர் கிருஷி. இவரின் புகைப்படம்தான் விஜய் சேதுபதியின் நியூ லுக் என சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.
இதுகுறித்து ஆசிரியர் கிருஷி “சில வாரங்களுக்கு முன் சென்னையில் நடந்த சித்த மருத்துவ மாநாட்டில் எடுத்தது அந்தப் புகைப்படம். பின்புறத்தில் கண்ணாடி அணிந்து என்னுடன் இருப்பவர் என் நண்பரும் ஓய்வு பெற்ற வங்கி நிர்வாகியுமான சந்திரபாபு. நெல்லையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மதன் சுந்தர்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தார்’’ என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் புகைப்படம் விஜய் சேதுபதியின் `நியூ லுக்’ என்ற பெயரில் பரவியது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,`மிகவும் மகிழ்ச்சியாகவும் பரபரப்பாகவும் உணருகிறேன். ஒரு வதந்தியால் என் புகைப்படத்துக்கு மில்லியன் கணக்கில் லைக்குகளும் ஷேர்களும் குவிந்து வருவதைக் கண்டு சந்தோஷம் அடைகிறேன்’’ என சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார் ஆசிரியர் கிருஷி.
Spread the love