இமாசல பிரதேசத்தில் கடந்த சிர தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 70-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த வெள்ளம் காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் குலு மற்றும் காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பீஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. காங்ரா மாவட்டத்தின் லஸ்க்வாரா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். குலு மாவட்டத்தின் பஜோரா கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வீதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தின் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மழை மட்டுமல்லாது மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவும் சேர்ந்து மக்களை பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கி உள்ளன. மழை மற்றும் வெள்ளத்தால் மணாலி சுற்றுலாத்தலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற பேருந்துஒன்று, நிலச்சரிவு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த பேருந்து பீஸ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தின் போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்தநிலையில் தமிழகத்தின் ஓசூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து கார் மற்றும் பேருந்துகளில் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர்.
அவர்கள் தற்போது வெள்ளத்தின் பிடியில் சிக்கி தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீர் வடிந்து நிலைமை சீராவதற்கு இன்னும் 4 நாட்கள் ஆகும் எனவும், அதுவரை விடுதிகளிலேயே தங்கியிருக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை இமாசல பிரதேச அரசு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் பஞ்சாப், சத்தீஷ்கார், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களும் பலத்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..