வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமாக வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக வடமராட்சி கிழக்கு பகுதியில் அரசதலத்தில் சட்டவிரோதமான முறையில் வாடி அமைத்து தங்கியுள்ள தென்னிலங்கையைச் சேர்ந்த கடலட்டை பிடிப்பவர்கள் சட்டவிரோதமான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தமை பிரதேச மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தென்னிலங்கை மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
இதனையடுத்து அங்கு தங்கியுள்ள எட்டு அட்டை பிடிக்கும் நிறுவனங்களிற்கு எதிராக மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த 21ஆம் திகதி வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று இதற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
குறித்த தென்னிலங்கை மீனவர்கள் உடனடியாக வெளியேற தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், தீர்ப்பின் பிரதியினை பெற்று காவல்துறையிடம் முறையிட்டு அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மருதங்கேணி பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன் கூறியுள்ளார்.